பேராவூரணி, ஆக 13 பேராவூரணியில் சைவ சித்தாந்த, சைவ திருமுறைகள், சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முதலாம் ஆண்டு நால்வர் திருவீதி உலா நடந்தது. பேராவூரணியில் நால்வர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் உருவச்சிலைகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நால்வர்களின் சிலைகள் வைக்கப்பட்டு திருவீதி உலாவை, எம்.எல்.ஏ அசோக்குமார் தொடங்கி வைத்தார், தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர் சங்க நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். திருவீதி உலா மாலை 5 மணிக்கு பேராவூரணி தனியார் மண்டபத்தில் இருந்து தொடங்கி முதன்மை சாலை, சேதுபாவாசத்திரம் சாலை வழியாக சென்று தாலுக்கா அலுவலகம் சென்று மீண்டும் புறப்பட்ட இடத்தை சென்றடைந்தது. பேராவூரணி சுற்றுவட்டார பகுதி மக்களின் நன்மைக்காக திருவீதி உலா நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். சித்தாந்த பேராசிரியர் தம்புலிங்கம், சித்தாந்த சைவத்திருமறை பேராசிரியர் மனோகரன், வெங்கடேசன் முருகேசன், சுசிலா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.