பேராவூரணி, அக் 1
பேராவூரணி பகுதியில் நாற்றுவிடுதல் மற்றும் நடவுப்பணி நடைபெற்றுவரும் நிலையில் அனைத்து தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளும் தேவையான அளவு உரங்களை இருப்பில் வைத்து விற்பனை செய்திட வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) ராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்படுவதாவது,
பேராவூரணி வட்டாரத்தில் 16 தனியார் உர விற்பனை மையங்களும் 13 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் தங்கு தடையின்றி அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கப்பெற ஏதுவாக உரங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
உரங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பது, விவசாயிகள் கேட்டுவரும் உரத்துடன் தேவையற்ற இதர உரங்களை இணைத்து கொடுப்பது, பி.ஓ.எஸ் மெஷினில் பட்டியலிடாமல் உரங்களை விற்பது ஒ-படிவம் அனுமதி பெறாமல் உரங்களை வாங்கி விற்பனை செய்வது போன்ற குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டால் உரக்கட்டுப்பாடு ஆணை 1985ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரங்கள் விற்பனை விலை மற்றும் இருப்பு குறித்த தகவல் பலகை அவசியம் விற்பனை நிலையத்தின் முன்பாக வைக்கப்பட வேண்டும். தராசு முத்திரையிடப்பட்டு முறையாக பயன்படுத்தப்பட வேண்டும். மூட்டைகளில் எடை குறைவு காணப்படின் அது குறித்த விபரம் வேளாண்மை அலுவலருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். தேவைக்கு அதிகமாக உரங்கள் வழங்கக்கோரி வரும் விவசாயிகளிடம் அவசியம் கணிணி சிட்டா பெறப்படவேண்டும். அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச நிர்ணயவிலையை தாண்டி உரங்களை விற்பனை செய்யக்கூடாது. புத்தக இருப்பும் உண்மை இருப்பும் சரியாக இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.