பேராவூரணி, செப் -04, தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வேளாண்மைத் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) மாலதி, பேராவூரணி பகுதியில், குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இயந்திர நெல் நடவு வயல்கள் மற்றும் ஜிங்சல்பேட் இட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டார். பேராவூரணி முதன்மை விரிவாக்க மையத்தில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வறட்சியை தாங்கி வளரக்கூடிய சொர்ணாசப் நெல் இரகத்தினை இதர இடுபொருட்களுடன் விவசாயிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து அஞ்சுரணிக்காடு பகுதியில் அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட உழவர் வயல் தின விழாவில் பங்கேற்று பசுந்தாளுரங்களின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ட விளக்கம் அளித்தார். டிராக்டர் கொண்டு பசுந்தாளுரப்பயிரினை மடக்கி உழுது மண்ணுக்கு வளம் சேர்க்கும் தொழில்நுட்பம் செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.
வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) ராணி, துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜ், உதவி வேளாண்மை அலுவலர்கள் கார்த்திகேயன், கோகிலா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நெடுஞ்செழியன், சத்யா ஆகியோர் உடனிருந்தனர்.