தஞ்சாவூர், அக்.5 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில், பருவ மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ்.கமலக்கண்ணன், உதவி மின் பொறியாளர் என்.ஹரி சங்கர் ஆகியோர் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமாரிடம் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து பேராவூரணி, ஒட்டங்காடு, சேதுபாவாசத்திரம், பெருமகளூர், திருச்சிற்றம்பலம், ஆவணம், நாடியம், குருவிக்கரம்பை துணை மின்நிலையப் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை, மின்வாரிய பணியாளர்கள் பொது மக்களிடம் வழங்கினர்.
அந்த துண்டுப் பிரசுரத்தில் கூறியிருப்பதாவது,
மின் கம்பி அறுந்து கிடக்கும் இடத்திற்கு அருகில் செல்லக்கூடாது. மின்கம்பி அறுந்து தரையில் கிடந்தால், அருகில் உள்ள மின்வாரிய அலுவலகம் மற்றும் மின்வாரிய பணியாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். விவசாயப் பணியின் போது நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள இழுவை கம்பியினை (ஸ்டே வயர்) அகற்றுதல் கூடாது. தாழ்வாகச் செல்லும் மின் பாதைகள் இருப்பின் அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை போதுமான இடைவெளி விட்டு கட்ட வேண்டும். மழை, பெருங்காற்று சமயங்களில் மின் கம்பம் அருகிலோ, மின்மாற்றி அருகிலோ செல்ல வேண்டாம். வீட்டிலோ, கடைகளிலோ பழுதான மின் இணைப்புக்கான வயர்களை உடனடியாக மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்து மாற்றிட வேண்டும். வீட்டில் உள்ள மின் காப்புத்திறன் (இன்சுலேசன்) இழந்த மின்வயர்களை உடனடியாக மாற்றிட வேண்டும். ஈரமான கைகளைக் கொண்டு மின்சாதனத்தை இயக்கக் கூடாது. பழுதான சுவிட்ச்களை வைத்து மின்சாதனங்களை இயக்கக் கூடாது. வீடு, கடை போன்ற கட்டிடங்களில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாதுகாப்பான முறையில் மின் வயர்கள் செல்லுமாறு அமைக்க வேண்டும். மேலும், மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களையும், மின்னகம் தொலைபேசி
94 98 79 49 87 என்ற எண்ணில் தெரிவிக்க வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மின்வாரியம் சார்பில் இவ்வாறு ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.