தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மூதாட்டி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, எம்எல்ஏ நிதியுதவி அளித்தார். தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குப்பத்தேவன் ஊராட்சி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி சின்னம்மா (75), இவர் தனது பேத்தி சுமதி, சுமதியின் பிள்ளைகளான 10 ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி, 7 ஆம் வகுப்பு படிக்கும் மோனிஷா, சுபா தேவி, 4 ஆம் வகுப்பு படிக்கும் ரித்தீஷ் ஆகியோருடன் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வேயப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, வீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதில் பள்ளிப்பாடப் புத்தகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தீயில் கருகி நாசமாகியது. இது குறித்து தகவல் அறிந்த பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் புதன்கிழமை பாதிக்கப்பட்ட மூதாட்டி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கினார். அப்போது, திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், ஒன்றியக்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது, ஊராட்சி மன்றத் தலைவர் பாலு மற்றும் கிராமத்தினர் உடனிருந்தனர்.