தஞ்சாவூர், நவ.8 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, ஆண்டவன்கோவில் அரசு கால்நடை மருத்துவமனை அருகே, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.11 லட்சம் உள்பட ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய உழவர் சந்தையை, காணொலிக்காட்சி மூலம் தஞ்சையிலிருந்து வியாழக்கிழமை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை பேராவூரணி உழவர் சந்தை அலுவலக கட்டடத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து குத்து விளக்கேற்றி வைத்து, கடை அமைத்துள்ள விவசாயிகளிடம், சொந்தப் பணத்தை கொடுத்து காய்கறிகள், கீரைகள், பழங்கள், தேங்காய், பூக்களை வாங்கி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
தஞ்சாவூர் வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கோ.வித்யா, வேளாண்மை அலுவலர் தாரா, துணை வேளாண்மை அலுவலர் (உழவர் சந்தை நிர்வாக அலுவலர்) என்.ராஜகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், திமுக ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், மு.கி.முத்துமாணிக்கம், கோ.இளங்கோவன், வை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, தொகுதி பார்வையாளர் சுப.சரவணன், திமுக அவைத் தலைவர் சுப.சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், பேரூராட்சி துணைத்தலைவர் கி.ரெ.பழனிவேல், உறுப்பினர் முருகேசன், பூவாளூர் ஞானப்பிரகாசம், உதவி வேளாண்மை அலுவலர்கள் பாலகிருஷ்ணன், சசிகுமார், ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.