தஞ்சாவூர், நவ.25 - பேராவூரணி அருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மன நல ஆலோசனை மருத்துவ அலுவலர்களால் வழங்கப்பட்டது. திங்கட்கிழமை மல்லிப்பட்டினம் தனியார் திருமண மண்டபத்தில் காலை 10.30 மணி அளவில் மாணவர்களுக்கும் - ஆசிரியர்களுக்கும் மருத்துவர்கள் மூலம் மனநல ஆலோசனை வழங்கும் பணி துவங்கி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 522 மாணவ, மாணவிகளும், 22 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மாவட்ட மனநல மருத்துவர் சித்ரா தேவி, பட்டுக்கோட்டை மனநல மருத்துவர் மங்கையர்கரசி, மனநல ஆற்றுநர் சுபாஷ், சமூக ஆர்வலர் சுகந்தி ஆகியோர் உளவியல் ஆலோசனைகள் வழங்கிப் பேசினர். மேலும், மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு மன இறுக்கத்தை போக்க மன விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர். இதில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், மீனவர் நலவாரிய துணைத் தலைவர் தாஜுதீன், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், சடையப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோ.கிருஷ்ணமூர்த்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவி ரஹ்மத்நிஷா, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், கிராமத்தினர் ஏராளமானோர் வருகை தந்து கலந்து கொண்டனர். முன்னதாக இறந்த ஆசிரியை ரமணிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பள்ளி வழக்கம்போல நாளை முதல் செயல்படும் என நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் துரைராஜ் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.