பேராவூரணி நீதிமன்றத்தில் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி புதன்கிழமை வருடாந்திர ஆய்வுப் பணியை மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில், தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் புதன்கிழமை அன்று 2023-2024 ஆம் ஆண்டுக்கான ஆய்வுப் பணியை மேற்கொண்டார். அப்போது, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் கோப்புகள், இதர ஆவணங்கள், நீதிமன்றத்திற்கு தேவையான வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். முன்னதாக, நீதிமன்ற வளாகத்தில் அவர் மரக்கன்று நட்டார். முன்னதாக, மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்தை, பேராவூரணி நீதிமன்ற நீதிபதி என்.அழகேசன் வரவேற்றார். அப்போது பேராவூரணி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.வி.சீனிவாசன், செயலாளர் சிவேதி ஏ.ஆர்.நடராஜன், பொருளாளர் ஏ.ஆர். முத்துக்குமார் மற்றும் பேராவூரணி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், காவல்துறை ஆய்வாளர்கள் பசுபதி (பேராவூரணி), துரைராஜ் (சேதுபாவாசத்திரம்), உதவி ஆய்வாளர் வீரமணி (திருச்சிற்றம்பலம்) ஆகியோர் உடன் இருந்தனர். பேராவூரணி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் சார்பில், பேராவூரணி நீதிமன்றத்தில் பணியாற்றி அண்மையில் மறைந்த முஜிபுர் ரஹ்மான் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்குமாறு மாவட்ட முதன்மை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்தார்.