தஞ்சாவூர், ஜன.25 -
புதிய விண்கற்களை கண்டுபிடித்த மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், மாணவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, மேடையிலேயே ரூபாய் 40 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கிய எம்எல்ஏ,வை மாணவர்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்றம் சார்பில், ஒருங்கிணைப்பாளர் தா.கலைச்செல்வன் தலைமையில், மன்ற உறுப்பினர்களான பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஷியாம், பிரபாகர், அகிலேஸ்வரன், சந்தியா, கோபாலன் ஆகிய மாணவர்கள், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நடத்திய விண் கற்கள் கண்டறியும் ஆராய்ச்சியில் மூன்று புதிய விண்கற்களை கண்டுபிடித்து அதற்கு பெயர் சூட்டும் வாய்ப்பை பெற்றனர்.
இந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா, கல்லூரி விழா அரங்கில் வெள்ளிக்கிழமையன்று கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு
சால்வை அணிவித்து, வாழ்த்திப் பேசினார். முன்னதாக, பேசிய மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று, அவர்களின் ஆராய்ச்சிப் பணிக்கு உதவும் வகையில் மடிக்கணினி மற்றும் அறிவியல் உபகரணங்கள் வாங்க, ரூபாய் 40 ஆயிரத்திற்கான காசோலையை கல்லூரி முதல்வரிடம் மேடையிலேயே வழங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பி பலத்த வரவேற்பை தெரிவித்தனர்.
நிகழ்வில், திமுக ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், மு.கி.முத்துமாணிக்கம், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகேந்திரன், கல்விப் புரவலர்கள் சுப.சேகர், அ.அப்துல் மஜீத் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேரா சி.ராணி வரவேற்றார். நிறைவாக பேரா ராஜ்மோகன் நன்றி கூறினார். பேரா முத்துக்கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.