பேருந்து நிலையத்தில் கிடந்த ஆதரவற்ற முதியவரை மருத்துவமனையில் சேர்த்த சமூக ஆர்வலர்கள்

IT TEAM
0

 



தஞ்சாவூர், ஜன.25 -

பேராவூரணி பேருந்து நிலையத்தில், ஆதரவற்ற நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, பசியோடு கிடந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் சுமார் 70 வயதுடைய 

யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்த, ஆதரவற்ற முதியவர் ஒருவர் கடந்த சில தினங்களாக சாப்பிடாமலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் படுத்த படுக்கையாக கிடந்தார். 


இது குறித்து தகவல் அறிந்த பேரூராட்சி கவுன்சிலர் மகாலட்சுமியின் கணவரும், சமூக ஆர்வலருமான சிவ.சதீஷ்குமார் மற்றும் பேராவூரணி பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் ஹசன் ஆகிய இருவரும் இது குறித்து பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். 


இதையடுத்து அங்கு வந்த பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் இருவர் உதவியுடன், பாதிக்கப்பட்டு அழுக்கான ஆடையுடன் கிடந்த முதியவரை மீட்டு, புதிய ஆடை அணிவித்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, சாப்பிட முடியாமல் படுத்த படுக்கையாக இருந்த முதியவருக்கு,

டிரிப் மூலம் நரம்பு வழியாக குளுகோஸ் செலுத்தி, பேராவூரணி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தற்போது சிகிச்சை அளித்து வருகின்றனர்.


இதுகுறித்து சமூக ஆர்வலர் சதீஷ்குமார் மற்றும் ஹசன் கூறுகையில், "பாதிக்கப்பட்ட முதியவருக்கு சிகிச்சை அளித்து, உடல்நலம் தேறியதும் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தனர். 


ஆதரவற்ற நிலையில் அழுக்குப் படிந்த ஆடையோடு கிடந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த சமூக ஆர்வலர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த பூமிப்பந்தில் கருணை, இரக்கம் இன்னும் பட்டுப்போகவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த செயல் அமைந்துள்ளது. 


அதேநேரத்தில் முதியவரை அரசு காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top