தஞ்சாவூர், ஜன.10 -
பேராவூரணி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தித் தர வேண்டும் என சட்டமன்றத்தில் பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் கோரிக்கை விடுத்தார்.
சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று கேள்வி நேரத்தின் போது பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் பேசியதாவது, பேராவூரணி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தரப்படுமா...? பேராவூரணி நகரில் பட்டுக்கோட்டை சாலை, சேது சாலை, அறந்தாங்கி சாலை, ஆவணம் சாலை ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தரப்படுமா...? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்துப் பேசிய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு,
பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை. பேரூராட்சிக்கு வருமானம் இருந்தால், போதிய அளவு மக்கள் தொகை இருந்தால் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தலாம். இந்த ஆண்டு 25 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, போதுமான வருமானமும், 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகையும் இருந்தால்,
பேராவூரணி பேரூராட்சியை
நகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலிக்கப்படும்.
இதேபோல், பல உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டபடி சாலைப் பணிகளோடு கழிவுநீர் வாய்க்கால், மழை நீர் வடிகால் வாய்க்கால் சேர்த்தே இனி அமைக்கப்படும். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்" என்றார்.