தஞ்சாவூர், மார்ச்.20 - தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுகோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட கடற்கரை கிராமங்களில், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமையாக்கல் திட்டத்தின் (TBGPCCR) கீழ், செம்பியன் மகாதேவிபட்டினம், வல்லவன்பட்டினம், அண்ணா நகர் புதுத்தெரு, சோமநாதன்பட்டினம் ஆகிய கிராமங்களிலும், கொள்ளுக்காடு அம்பேத்கர் நகர், கொள்ளுக்காடு அந்தோனியார் நகர், மந்திரிப்பட்டினம், மந்திரிப்பட்டினம் மீனவர் காலனி ஆகிய கிராமங்களில், தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் ஆனந்த் குமார் உத்தரவின் படி, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில், கடற்பசு பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் செவ்வாய், புதன் இரு தினங்கள் நடைபெற்றது. இதில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் பேசுகையில், "கடல் பசுக்கள் சாதுவான பிராணி, கடலில் மீன் வளம் பெருகுவதற்கு கடல் பசுக்கள் காரணியாக உள்ளது. அருகி வரும் கடல்பசு உள்ளிட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை நாம் பாதுகாக்க வேண்டும். மீனவர்கள் வலையில் சிக்கும் கடல் பசுக்களை உயிருடன் மீட்டு கடலுக்குள் விடும் மீனவர்களுக்கு வனத்துறை சார்பில் வெகுமதிகள், சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. திருச்சி வி.ஆர்.எம் கலைக் குழுவினர் கலந்து கொண்டு ஆடல், பாடல் கலைநிகழ்ச்சி மூலம் கடற்பசு, கடல் ஆமை உள்ளிட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் பற்றி கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், கடலோர பாதுகாப்புக்குழும உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், வனவர் சிவசங்கர், வனக்காப்பாளர்கள் பாரதிதாசன், கலைச் செல்வன், வேட்டைத் தடுப்பு காவலர்கள், மீனவ கிராம பொதுமக்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.