தஞ்சாவூர், மார்ச்.22,-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா பள்ளியில் உலக வன நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.
பள்ளி நிர்வாக இயக்குனர் எம்.நாகூர் பிச்சை தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் கலந்து கொண்டு உலக வனநாளின் சிறப்புகள் குறித்தும், மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்தும், கடற்பசு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும் பேசினார். கரூர் கலைமகள் காவேரி கலைக்குழுவினர் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பட்டுக்கோட்டை வனவர் சிவசங்கர், வேட்டைத் தடுப்பு காவலர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கொன்றை, வேம்பு, அரசு, புங்கன், மகாகனி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
முன்னதாக பள்ளி நிர்வாக அலுவலர் ஆர்.சுரேஷ் வரவேற்றார். நிறைவாக ஆசிரியர் ஆர்.மூர்த்தி நன்றி கூறினார்.