தஞ்சாவூர், மார்ச்.6 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில், தென்னை மற்றும் பயறுவகை பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக விஞ்ஞானிகளுடன் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறையினர் இணைந்து வியாழனன்று களத்தூர் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
பேராவூரணி வட்டாரம், களத்தூர் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னையில் சுருள் வெள்ளை ஈயின் தாக்குதல் குறித்தும், தஞ்சாவூர் வாடல் நோயின் தாக்குதல் குறித்தும், பயறு வகை பயிர்களில் பரவி வரும் மஞ்சள் தேமல் நோயின் தாக்குதல் குறித்தும் கள ஆய்வு செய்தனர்.
தென்னையில் சுருள் வெள்ளை ஈயின் தாக்குதலினால் தென்னை ஓலைகள் முழுவதும், கருமை நிற பூசனத்தால் கருமை நிறமாக மாறியுள்ளதன் விளைவாக ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு அதன் விளைவாக மகசூல் இழப்பு ஏற்பட்டு வருவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதனை தவிர களத்தூர் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிர்களில் மஞ்சள் தேமல் நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டது. நோயுற்ற செடிகளை உடனடியாக பிடுங்கி அப்புறப்படுத்தவும், சான்று பெற்ற உளுந்து விதைகளை இமிடாகுளோபிரிட் என்றும் பூச்சி மருந்து கொண்டு 1 கிலோ விதைக்கு ஒன்று முதல் இரண்டு மில்லி வீதம் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து விதைத்து, அதன் பிறகு வளர்ச்சி பருவத்தில் 1 லிட்டர் தண்ணீரில் ஒன்று முதல் இரண்டு மில்லி வீதம் இமிடாகுளோபிரிட் மருந்தை பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இக்கள ஆய்வில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுடன் வேளாண் விஞ்ஞானிகள், வேளாண்மைத்துறை, தோட்டக் கலைத்துறையினர் சுமார் அரை மணி நேரம் கலந்துரையாடி அவர்களின் சந்தேகங்களுக்கு தொழில்நுட்ப விளக்கமளிததனர்.
இந்த கள ஆய்வில் தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கோ.வித்யா, காட்டுத்தோட்டம், வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் டி.பார்த்திபன், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் கே.குமணண், டாக்டர். எம்.சுருளிராஜன் மற்றும் உதவி பேராசிரியர் (பூச்சியியல் துறை) டாக்டர் என்.முத்துக்குமார், பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ராணி, துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜன், வேளாண்மை உதவி அலுவலர் ஜி.கவிதா மற்றும் களததூர் கிராம முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், , களத்தூர் விவசாயிகள் ஆகியோர் பங்கேற்றனர்.