பேராவூரணியில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

IT TEAM
0

 


பேராவூரணியில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி 


தஞ்சாவூர், மார்ச்.13 - 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனியார் திருமண மண்டபத்தில், தஞ்சாவூர் மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


இதில், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களைச் சேர்ந்த 250 கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சந்தனம், குங்குமம் பூசி, மாலை அணிவித்து, வளையல் பூட்டி அலங்கரித்து, தாம்பூலத் தட்டில் காப்பரிசி, மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, சேலை ஆகியவற்றை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் வழங்கி, அட்சதை தூவி வாழ்த்தினார். 


தொடர்ந்து, கர்ப்பிணிகள் 250 பேர், அவர்களது உறவினர்கள் என 750 க்கும் மேற்பட்டோருக்கு சர்க்கரை பொங்கல், தேங்காய் சாதம், புளியோதரை, தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி என காலை 5 வகையான சாதங்கள் வழங்கப்பட்டது. 


கர்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் சத்தான உணவுப் பொருட்கள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில் கேழ்வரகு புட்டு, கேழ்வரகு கஞ்சி, கோதுமை கார அடை, கோதுமை பக்கோடா, பாசிப்பயறு கஞ்சி, கோதுமை முறுக்கு, ராகி உப்புமா, கொண்டக்கடலை சுண்டல், பாசிப்பயறு சுண்டல், சத்துமாவு கொழுக்கட்டை, கேழ்வரகு அடை மற்றும் சத்தான காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 

மேலும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். 


நிகழ்வில், திமுக அவைத் தலைவர் சுப.சேகர், 

ஒன்றியச் செயலாளர்கள் மு.கி.முத்துமாணிக்கம், கோ.இளங்கோவன், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், நிர்வாகிகள் வழக்குரைஞர் குழ.செ.அருள்நம்பி, த.பன்னீர்செல்வம், ஷாஜகான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன் (சேதுபாவாசத்திரம்), சாமிநாதன் (பேராவூரணி), வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம், மருத்துவ அலுவலர்கள் சரண்யா, கிருத்திகா, ரேவதி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிலோமினா சாந்தினி, கண்காணிப்பாளர்கள் ரமேஷ், சதீஷ், கந்தவேல், சன்மதி பாலா, மேற்பார்வையாளர்கள் காமாட்சி, செல்வநிதி, பழனியம்மாள், சீதா, அமுதா, தமிழரசி, சாந்திமதி, 

அங்கன்வாடிப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


முன்னதாக மாவட்ட திட்ட அலுவலர் ராஜேஸ்வரி வரவேற்றார். நிறைவாக குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அனுசியா நன்றி கூறினார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top