தஞ்சாவூர், பிப்.28 -
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, கொள்ளுக்காடு கிராமத்தில், தகுதியான நிலமற்ற ஏழைகளுக்கு வழங்குவதற்காக, 50 மனைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டு, வள்ளலார்புரம் என்ற நகர் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய நகரை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ முன்னிலையில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் வருவாய்த்துறையினர் அளவீடு செய்து, எல்லைக்கல் நட்டு மனைப் பிரிவுகள் உருவாக்கி வருவதை சட்டப்பேரவை உறுப்பினர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த வள்ளலார்புரத்தில் தகுதியான தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மனைப்பட்டா விரைவில் வழங்கப்பட உள்ளது.
நிகழ்வில், வட்டாட்சியர் சுகுமார், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், துணை வட்டாட்சியர்கள் பாலசுப்பிரமணியன், உமர், வருவாய் ஆய்வாளர் பால்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் ராஜா மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.